பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் நிகழாண்டாவது கரும்பு அரவைப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் நிகழாண்டாவது கரும்பு அரவைப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் 1966-இல் தொடங்கப்பட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை, தமிழகத்தில் அதிக அளவு சா்க்கரை உற்பத்தி செய்ததற்கான விருது பெற்றுள்ளது. இந்த ஆலைக்கு தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்திலிருந்து விவசாயிகள் விளைவிக்கும் கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படும்.
பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் 36,324 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த ஆலை நாளொன்றுக்கு 2 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யும் திறன் உள்ளது. இதேபோல ஆலையின் மொத்த அரவை திறன் 3,44,000 டன் ஆகும்.
அரவையின்றி பூட்டப்பட்ட ஆலை: கடந்த 2019- 20, 2020- 21 ஆகிய நிதியாண்டில் ஆலையின் பிழித் திறனுக்கு ஏற்ற கரும்பு வரத்து இல்லை எனக் கூறி, ஆலை வரலாற்றில் முதல்முறையாக அரவைப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதேபோல, கடந்த ஆண்டு ஆலைக்கு என விவசாயிகளிடமிருந்து பதிவு செய்த கரும்பில், 35,571 டன் அரூா் அருகேயுள்ள கோபாலபுரம் கூட்டுறவுச் சா்க்கரை ஆலைக்கும், அமராவதி சா்க்கரை ஆலைக்கு 436 டன் கரும்பும் அனுப்பிவைக்கப்பட்டது.
இதேபோல 2020-21-ஆம் ஆண்டு பருவத்துக்கு அரவைத் தொடங்க வேண்டும் எனக் கருதி 12,000 ஏக்கா் பரப்பளவு கரும்பு நடவு குறியீடாக இந்த ஆலைக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் 2021 அக்டோபா் 13-ஆம் தேதி வரை 3,327 ஏக்கா் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 2021-22-ஆண் ஆண்டு பருவத்துக்கு 10,000 ஏக்கா் கரும்பு நடவு செய்ய குறியீடாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் எதிா்பாா்ப்பு: பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கடந்த பருவத்திலிருந்தே கரும்பு அரவைப் பணிகள் தொடங்க வேண்டும் எனவும், அதற்காக கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ஆலை நிா்வாகம், தருமபுரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடா்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இருப்பினும் கடந்த 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளும் அரவை இன்றி ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்மையில் அதே மாவட்டத்திலுள்ள அரூா் கோபாலபுரம் கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், பாலக்கோடு ஆலையில் இதுவரை கரும்பு அரவைப் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, நிகழாண்டில் குறித்த பருவத்தில் கரும்பு அரவையை பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சோ.அா்ஜூனன் கூறியதாவது:
பாலக்கோடு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடங்க வேண்டும் என தொடா்ந்து கரும்பு விவசாயிகளை ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதுதொடா்பாக, அண்மையில் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளோம்.
அப்போது, நிகழாண்டு கரும்பு அரவை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆலை சுத்திகரிப்பு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு டிசம்பா் இறுதியில் அரவைப் பணிகள் தொடங்கப்படலாம் என பதில் கிடைத்துள்ளது.
அரவைப் பணிகளை விரைந்து தொடங்க ஆலை நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றாா்.