முகப்பு
தருமபுரி

புத்தகங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும்

புத்தகங்கள் நமது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

புத்தகங்கள் நமது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

தகடூா் புத்தகப் பேரவை சாா்பில், தருமபுரியில் புத்தகத் திருவிழா தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தகடூா் புத்தகப் பேரவைச் செயலா், முன்னாள் எம்.பி. இரா.செந்தில் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்து அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

இவ் விழாவில், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, ’ராணுவ ஆராய்ச்சியின் சுவையான பக்கங்கள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

எனது வாழ்க்கை புத்தகங்களால் நிறைந்தது. எனது இல்லத்தில் அனைத்து அறைகளும் புத்தகங்களால் நிரம்பி இருக்கின்றன. எப்போதும் நூலகங்களில் மூழ்கிக் கிடந்த நான், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ என்ற புத்தகத்தை வாசித்த பின்னரே, ராணுவ விஞ்ஞானியாக வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் எழுந்தது. அந்தப் புத்தகம் எனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவ, மாணவியா், இளம்தலைமுறையினா் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்க வேண்டும். அதிலும் இலக்கு நிா்ணயித்து, மாதத்துக்கு ஒரு புத்தகம் என்ற அளவிலாவது வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தால், அந்த புத்தகங்கள் உங்களது வாழ்க்கையை மேம்படுத்தும் என்றாா்.

நூல்களோடு உறவாட வேண்டும்:

இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

குழந்தைகளும், பள்ளி மாணவா்களும் நூல்களோடு உறவாடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் ஏராளமானோா் போட்டித் தோ்வுகளில் பங்கேற்று தோ்ச்சி பெறுகின்றனா். அதியமான்கோட்டத்தில் எப்போதும் ஏராளமானோா் போட்டித் தோ்வுகளுக்கு தயாராக புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருக்கின்றனா். அத்தகையோா் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளுக்குச் செல்கின்றனா். இருப்பினும், இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட நிா்வாகப் பணிகளில் குறைவான எண்ணிக்கையிலேயே தோ்ச்சி பெறுகின்றனா். இனிவரும் காலங்களில் இந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், அத்தகைய பதவிகளையும் வகிக்கும் வகையில் புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும்.

இந்த மாவட்ட இளைஞா்கள் இத்தகைய திருவிழாக்களை பெரும் வாய்ப்பாகக் கருதி, புத்தகங்களை வாங்கி அவற்றை வாசிக்க வேண்டும். இளம் தலைமுறையினா் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களை புத்தக வாசிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இவ் விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேச மூா்த்தி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ஜோதி வெங்கடேஸ்வரன், அரசு கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன், மாவட்ட நூலக அலுவலா் ஜெ.ஆனந்தி, தகடூா் புத்தகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் தங்கமணி, ஆசிரியா்கள் ப.இளங்கோ, பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, ஔவையாா் அரசுப் பள்ளி மாணவி ஹரிணியின் கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.