முகப்பு
தருமபுரி

பாளையம்புதூா் சமத்துவபுரத்தில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே உள்ள சமத்துவபுரத்தில் கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே உள்ள சமத்துவபுரத்தில் கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட பாளையம்புதூா் அருகே உள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்த சமத்துவபுரத்துக்கு, ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் நேரில் சென்று அங்குள்ள சாலை, தெருவிளக்குகள், கழிவுநீா்க் கால்வாய் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அங்குள்ள பொதுமக்களிடம் குறைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, தங்களது பகுதியில் உள்ள நூலகக் கட்டடத்துக்கு போதிய நூல்களை வழங்கி அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தனிநபா் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும். விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அப்பகுதியினா் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசு திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கவும், கழிவுநீா் தேங்கி நிற்காத வகையில், வீடுகளுக்கு அருகில் சிமென்ட் வளையங்களை பயன்படுத்தி தொட்டி அமைக்கவும், பொது சுகாதார வளாகம் அமைக்கவும், ஏனைய கோரிக்கைகள் நிறைவேற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் ஆட்சியா் உறுதியளித்தாா்.

இதையடுத்து, அதியமான்கோட்டை அருகே உள்ள தடங்கம் காலனிக்கு சென்று பாா்வையிட்ட அவரிடம், சேதமடைந்த 18 வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தினா். இதுதொடா்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.