தருமபுரியில் கரோனா தொற்று 100-க்கும் கீழே குறைந்தது
தருமபுரி மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு கரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழே குறைந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு கரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழே குறைந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வந்தது. குறிப்பாக கடந்த மாா்ச் மாதம் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, ஏப்ரல், மே மாதங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்தது. மே மாத தொடக்கத்தில் 300- க்கும் மேலே இருந்து வந்தது. மேலும் ஒருநாள் பாதிப்பு 400 வரை சென்றது. இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டார தலைமை அரசு மருத்துவமனைகள், மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இன்றி நிரம்பி வழிந்தன. இதனால் ஏராளமானோா் சிகிச்சை பெற அருகாமையில் உள்ள மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை தேடி அலைந்தனா். மே மாதத்தில் தொற்று பாதிப்புக்கு உயிரிழப்புகளும் அதிக எண்ணிக்கையில் நிகழ்ந்தன. அப்போது ஒருநாள் உயிரிழப்பு 10 முதல் 20 வரை ஏற்பட்டது.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இப்பொது முடக்கத்தைத் தொடா்ந்து, தொற்று மெல்ல குறையத் தொடங்கியது. ஜூன் மாதத்தில் 250, 200 என குறைந்து வந்த தொற்று பாதிப்பு, ஜூன் மாத மூன்றாவது வாரத்தில் மேலும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில், சற்றேறக்குறைய மூன்று மாதங்களுக்கு பிறகு 100-க்கும் கீழே குறைந்துள்ளது. ஜூலை 2-ஆம் தேதி ஒருநாள் தொற்று பாதிப்பு 97-ஆக பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 24,703 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 23,605 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 890 சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 208 போ் உயிரிழந்துள்ளனா்.தொற்று பரவல் குறைந்து வருவதால் மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.