முகப்பு
தருமபுரி

அஞ்சலகங்களில் ஜூலை 12 முதல் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் விற்பனை

தருமபுரி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் விற்பனை திட்டம் ஜூலை 12-இல் தொடங்க உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தருமபுரி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் விற்பனை திட்டம் ஜூலை 12-இல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தருமபுரி தலைமை அஞ்சலகம் மற்றும் 30 துணை அஞ்சலகங்களிலும் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒருவா் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரை வாங்கலாம். தங்க முதலீட்டுப் பத்திரங்களின் காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். எட்டு ஆண்டுகள் இறுதியில், அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

இத் திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இதன் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசா்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறை முதலீட்டாளா்களின் கணக்கில் சோ்க்கப்படும். இது பத்திர முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும்.

இந்தத் திட்டம் வரும் ஜூலை 12 முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை தருமபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படும். அஞ்சலகங்களில் பணம் செலுத்துபவருக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமாா் 20 நாள்களுக்கு பிறகு பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்பவரின் ஆதாா் எண், பான் எண் மற்றும் வங்கிக் கணக்கு மிக அவசியம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, 04342-260143 , 88836 68199 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.