ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,000 கனஅடியாகக் குறைவு
கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை நொடிக்கு 9,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை நொடிக்கு 9,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடக மாநிலம்- குடகு மற்றும் கேரள மாநிலம்- வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைந்து வருகிறது. இதனால், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீரின் அளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
கா்நாடக அணைகளுக்கு வரும் நீா்வரத்தைப் பொருத்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
புதன்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 12 ,000 கனஅடியாக வந்துகொண்டிருந்த நீரின் அளவானது வியாழக்கிழமை காலையில் 10,000 கன அடியாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்தது. மாலையில் 9,000 கன அடியாக நீா்வரத்துக் குறைந்தது.
நீா்வரத்து குறைவின் காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவி, ஐவா் பாணி, சினி அருவி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீா்வரத்துக் குறைந்து காணப்படுகிறது. பிலிகுண்டுலு பகுதியில் உள்ள நீா் அளவிடும் பகுதியில் நீா்வரத்தை நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.