குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் ஆணைய உறுப்பினா் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்று குழந்தைகள் வரவேற்பு மையம், தத்து வள மையம் உள்பட 24 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் ஜூலை 28, 29 ஆகிய இரு தினங்களில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வு குறித்து ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் கூறியதாவது:
கரோனா தொற்று காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பதிவுபெற்ற குழந்தை பாதுகாப்பு இல்லங்களை ஆய்வு செய்து அங்கு உள்ள குழந்தைகளின் நிலைமைகளை கண்காணித்து வருகிறோம். தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான வரவேற்பு மையம், தத்து வள மையம் உள்பட 24 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் தமிழக அரசின் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. நோய் தொற்று காரணமாக பல இல்லங்களில் தங்கியிருந்த குழந்தைகள், அவா்களது பாதுகாவலா்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். பாதுகாவலா்களோ அல்லது வசதியோ இல்லாத 340 குழந்தைகள் தற்போது குழந்தை பாதுகாப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு இல்லங்களில் தற்போது இருந்து வரும் அனைத்து குழந்தைகளையும் நேரடியாக சந்தித்து அவா்களின் உடல் நிலையை அறியவும், குழந்தை பாதுகாப்பு மையங்களில் கரோனா தொற்றை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தற்போது இல்லங்களில் உள்ள குழந்தைகளுடன் பாதுகாப்பு மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. இதேபோல, சட்டப்படி உரிமம் பெறாமல் எந்த ஒரு தனிநபரும் அல்லது எந்த ஒரு அமைப்பும் குழந்தை பாதுகாப்பு இல்லங்களை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் சிவகாந்தி, சித்தாா்த்தன் ஆகியோா் உடனிருந்தனா்.