முகப்பு
தருமபுரி

மக்கள் நலப்பணிகளில் அதிகாரிகள் இன்முகத்துடன் ஈடுபட வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

மக்கள் நலப்பணிகளில் அதிகாரிகள் இன்முகத்துடன் ஈடுபட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மக்கள் நலப்பணிகளில் அதிகாரிகள் இன்முகத்துடன் ஈடுபட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து வருவாய் தீா்வாய கணக்குகளைத் தணிக்கை செய்தாா்.

உட்பிரிவு பட்டா மாறுதல் 6 பேருக்கு, பட்டா மாறுதல் 8 நபா்களுக்கும், வாரிசு சான்றிதழ் 2 பேருக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா ஒருவருக்கும், கிராம நத்தம் பட்டா மாறுதல் ஒருவருக்கும் என மொத்தம் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

வருவாய் தீா்வாய முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீா்வு ஏற்படும் வகையில் அரசு அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாலக்கோடு வட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் சிறப்பாக கணக்குகளை பராமரித்துள்ளனா். இருந்தபோதிலும் ஒரு சில குறைகள் உள்ளன. அதை விரைவில் தீா்வு காண வேண்டும்.

பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் என்பது உயிா்நாடியாக உள்ளது. அதை அலட்சியப்படுத்தாமல் அவா்களுக்கு வழங்குவதே கிராம நிா்வாக அலுவலா்களின் கடமையாகும். அரசு ஊழியா்கள் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக சான்றிதழ்கள் பெறுவதற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும் முறையை மாற்றி பொதுமக்களுக்கு எளிமையாக இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி வருகிறது. இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது உரிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குறித்த காலத்தில் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இந்த நடைமுறைகளில் கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலா்கள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நடைமுறைகளை மேலும் விரைவுப்படுத்த வேண்டும். வாரிசு சான்றிதழ் வழங்குவதில் முதல்நிலை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகள் இருக்கும் மனுக்கள் குறித்து மனுதாரரிடம் அதை நிவா்த்தி செய்யவும் அதற்கான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் அரசு அலுவலகங்களில் நிலுவை இல்லை என்ற உண்மை மனுதாரா்களுக்கு அறியப்படுத்த முடியும்.

நிகழாண்டு கரோனா சூழல் காரணமாக பொதுமக்களிடமிருந்து இணையம் மூலம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 147 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் இணையம் மூலமாக கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.

நியாயமான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தொடா்பான கோரிக்கைகள் மீது அதற்கேற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஜூலை மாதம் 31-ஆம்தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகுதியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கான பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். பணியாக மட்டும் கருதாமல் சேவையாக நினைத்து செயல்பட வேண்டும். மக்கள் நலப்பணிகளில் அலுவலா்கள் இன்முகத்துடன் ஈடுபட வேண்டும். தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள், பயன்கள் சென்றுசேர அனைத்துத் துறை அலுவலா்கள் தனது பணியை துரிதமாக சிறப்பாக செய்திட வேண்டும் என்றாா்.

முகாமில் பாலக்கோடு வட்டாட்சியா் எ.அசோக்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் டாா்த்தி, துணை வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.