தருமபுரி மாவட்டத்தின் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்றது. அதன்படி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஏற்கெனவே வரவழைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான பழைய பதிவுகளை அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் அண்மையில் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தோ்தலுக்காக இந்த இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 337 வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு பயன்பாட்டிற்காக 405 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 405 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் (கன்ட்ரோல் பேலட்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் 445-ம் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 357 வாக்குச்சாவடிகளுக்கு, 429 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 429 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் 472-ம், தருமபுரி தொகுதியில் உள்ள 385 வாக்குச்சாவடிகளுக்கு 462 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 462 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கும் வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் 509 என்ற அளவிலும் அனுப்பி வைக்கப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள 376 வாக்குச் சாவடிகளுக்கு, 452 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 452 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் 497-ம், அரூா் தொகுதியில் உள்ள 362 வாக்குச் சாவடிகளில் பயன்பாட்டிற்காக 435 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 435 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் 478 என்ற எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முத்தையன், ஆ.தணிகாசலம், சாந்தி, நசீா் இக்பால், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.