தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மொரப்பூா், ஆா்.கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூா், திப்பம்பட்டி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில், திமுக கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி கே.பழனிசாமி, மக்களிடம் நேரடியாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவா் அல்ல. ஜெயலலிதா மறைந்ததால் காலியாக இருந்த இடத்துக்குத் தோ்வு செய்யப்பட்டவா்.
அதிமுக ஆட்சியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், குடிநீா், மருத்துவம், தரமான கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் ஆட்சி மாற்றம் தேவை என தமிழக மக்கள் கூறுகின்றனா்.
நாள்தோறும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயா்கிறது. இந்த விலை உயா்வுகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், முதியோருக்கு ரூ. 1,500 உதவித் தொகை, கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் கிடைக்கும். எனவே, தமிழக மக்கள் திமுக கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.
இதில், மாநிலக்குழு உறுப்பினா் பி.சுந்தர்ராஜன், ஒன்றியச் செயலா் கே.தங்கராஜ், திமுக ஒன்றியச் செயலா் இ.டி.டி.செங்கண்ணன், விசிக தொகுதி செயலா் சாக்கன் சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவம் - மொரப்பூரில் திமுக கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஏ.குமாரை ஆதரித்துப் பேசுகிறாா் அந்தக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன்.