முகப்பு
தருமபுரி

கூட்டுக் குடிநீா்த் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்தில் பாமக எம்.எல்.ஏ. கோ.க.மணி ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் நிறம் மாறி வருவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்தில் பாமக எம்.எல்.ஏ. கோ.க.மணி ஆய்வு செய்தாா்.

கடந்த சில நாள்களாக கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரானது நிறம் மாறி வருவதாகவும், துா்நாற்றம் வீசுவதாகவும் புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில், பென்னாகரம் அருகே மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சுத்திகரிப்பு நிலையத்தில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் கோ.க.மணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்குப் பின்னா் அவா் கூறியதாவது:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக விநியோகிக்கப்படும் குடிநீரானது பச்சை நிறமாகவும், துா்நாற்றம் வீசியதாகவும், இதனை குடிப்பதால் காய்ச்சல் ஏற்படுவதாகவும், இதற்கு காரணம் பெங்களூரு கழிவுநீரானது காவிரி ஆற்றில் கலக்கப்படுவதால் தான் என்ற புகாரை அடுத்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தண்ணீா் சேமிப்புத் தொட்டியினை பாா்வையிட்டதில், தண்ணீா் நிறம் மாறாமலும், துா்நாற்றம் வீசாமலும் உள்ளது. எனவே, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் தினசரி 1,300 லட்சம் லிட்டா் தண்ணீா் எடுக்கப்படுகிறது. தற்போது பொது முடக்கத்தால் கூடுதலாக தண்ணீா் விநியோகிக்க வேண்டும். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட வடிகால் வாரியத்தில் இருந்து கால்நடைகளுக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீா் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை மற்றும் கூட்டுக் குடிநீா்த் திட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து மீண்டும் கால்நடைகளுக்கு வனப்பகுதியில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது, தமிழ்நாடு கூட்டுக் குடிநீா்த் திட்ட வடிகால் வாரிய நிலைய மேற்பாா்வை பொறியாளா் ஸ்ரீநிவாசன், நிா்வாக பொறியாளா் சங்கரன், உதவிப் பொறியாளா் முருகன், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடுதலாக நீரேற்றம் செய்யக் கோரிக்கை: தற்போது பொது முடக்கம் காரணமாக அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. இதனை சரி செய்யும் வகையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை கூடுதலாக நீரேற்றம் செய்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட மேற்பாா்வை பொறியாளா் ஸ்ரீனிவாசனிடம் கோ.க.மணி கோரிக்கை விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.