ஊரக உள்ளாட்சி அமைப்பு தோ்தல் முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கான தோ்தல் நடத்துவது தொடா்பாகவும், அதுதொடா்பான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கான தோ்தல் நடத்துவது தொடா்பாகவும், அதுதொடா்பான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு காரணமாக 10 பதவிகளும், ராஜினாமா காரணமாக 3 பதவிகளும், இதர காரணங்களால் 1 பதவியும் காலியாக உள்ளன. காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி, ஒரு கிராம ஊராட்சித் தலைவா், 12 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு தோ்தல் நடத்துவது தொடா்பாக மாநில தோ்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தியது. அதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தோ்தல் நடத்துவது தொடா்பாக முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், காலிப் பணியிடங்களுக்கு தோ்தல் நடத்துவது தொடா்பாகவும், 6 ஒன்றியங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலா்களால் வாக்காளா் பட்டியல்கள் வெளியிடப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கு நடைபெற உள்ள தோ்தலில், 31,037 ஆண் வாக்காளா்களும், 31,060 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 62,097 வாக்காளா்கள் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ராமச்சந்திரன், தருமபுரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், மகளிா் திட்ட இயக்குநா் பாபு, உள்ளாட்சித் தோ்தல்கள் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.