முகப்பு
தருமபுரி

விநாயகா் சதுா்த்தி: வீடுகளில் சிலை வைத்து வழிபாடு

தருமபுரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபட்டனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நிகழாண்டு பொது இடங்களில் சிலை வைத்து விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி, வீடுகளில் சிலை வைத்து கொண்டாடுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால், தருமபுரி நகரம், ஊரகப் பகுதி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தா்கள், பொதுமக்கள் சிறிய அளவிலான சிலைகளை வாங்கிச் சென்று தங்களது வீடுகளில் வைத்து வழிபட்டனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி தருமபுரி நகரில் உள்ள சாலை விநாயகா் கோயிலில் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தருமபுரி நகரைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் விநாயகரை வழிபட்டனா். குமாரசாமிபேட்டை செல்வகணபதி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தங்கக் கவச அலங்காரத்தில் விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரூரில்...

அரூா்-சித்தேரி சாலையில், எல்லப்புடையாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா் உள்ளிட்ட திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாணராமா், நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயில் உள்பட அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகா் சதுா்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், விநாயகருக்கு 608 லிட்டா் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். இதே போல காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் வெண்ணைக் காப்பு அலங்காரத்திலும், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வினைதீா்த்த விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்திலும், பழைய பேட்டை கொத்தபேட்டா ஞானவிநாயகா் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், காந்தி நகா் வலம்புரி விநாயகா் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சேலம் சாலை, ஆதிசக்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா்.

இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பக்தா்கள் வழிபட்டனா். வீடுகளில் விநாயகா் சிலையை வைத்து, விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, சுண்டல் , பழங்கள் உள்ளிட்டவற்றை பூஜித்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.