ஒகேனக்கல் அருவியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு குளிக்க அனுமதி
ஒகேனக்கல் அருவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
பென்னாகரம்: ஒகேனக்கல் அருவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்வர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒகேனக்கல் அருவிகள் சேதமடைந்ததாலும், கரோனா தீநுண்மி தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது.
இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து வந்தனர். இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நொடிக்கு 800 கன அடியாக வந்து கொண்டிருப்பதால் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி அனுமதி வழங்கியுள்ளார். இதனால் ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.