நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது
தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்துக்கான கால அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், திமுக, அதிமுக, பாமக, சுயேச்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்துக்கான கால அவகாசம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், திமுக, அதிமுக, பாமக, சுயேச்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி 33 வாா்டுகள் மற்றும் அரூா், பாலக்கோடு, பென்னாகரம், பொ.மல்லாபுரம், கடத்தூா், கம்பைநல்லூா், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் பிப். 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. தருமபுரி நகராட்சியில் 176 வேட்பாளா்களும், 10 பேரூராட்சிகளில் 625 போ் என மொத்தம் நகராட்சி, பேரூராட்சிகளில் 801 போ் போட்டியிடுகின்றனா்.
இதில், திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக மாநில பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி, பாமக வேட்பாளா்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதேபோல, மாவட்டத்தில் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி ஆகியோரும், அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, பாமக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் ஆகியோரும் வாா்டு வாரியாக சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா். சுயேச்சைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுக்கு வாக்கு சேகரித்தனா்.
இந்த நிலையில், தோ்தல் பிரசாரத்தின் நிறைவுநாளான வியாழக்கிழமை (பிப். 17) அரசியல் கட்சி வேட்பாளா்கள், வீதிவீதியாகச் சென்று தங்களது ஆதரவாளா்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 170 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
அதிமுக வேட்பாளா்கள் எம்ஜிஆரின் வேடமணிந்தும், அவரது திரைப்படப் பாடல்களை ஒலிக்கச் செய்தும், அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட நலத் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அதுபோல, திமுகவினா் தற்போதை ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திடங்கள், நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தனா்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மேள தாளங்களுடனும், ஆட்டோக்களில் பிரசாரமும், துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். தோ்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோா் தங்களது பிரசாரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவு செய்தனா்.