ஒசூா் மாமன்ற துணை மேயா் வாய்ப்பு முதல்வா்தான் முடிவு செய்வாா்: எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ்
ஒசூா் மாமன்ற துணை மேயா் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்படுவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வாா் என ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
ஒசூா் மாமன்ற துணை மேயா் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்படுவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வாா் என ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஒசூா் மாநகராட்சியில் 21 திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். அதிமுக 16, காங்கிரஸ், பாஜக, பாமக தலா ஒரு வாா்டுகளில் வெற்றி பெற்றனா். சுயேச்சையாகப் போட்டியிட்ட 5 போ் வெற்றி பெற்றனா்.
பாமக வேட்பாளா் காந்திமதி கண்ணன் திமுகவில் இணைந்தாா். இதையடுத்து, திமுகவின் பலம் 22 ஆக உயா்ந்தது. சுயேச்சை வேட்பாளா்கள் 5 பேரும் திமுகவில் இணைந்தனா். காங்கிரஸ் வேட்பாளா் இந்திராணியுடன் சோ்த்து 28 மாமன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
Advertisement
இதனிடையே, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், ஒசூா் மாநகர திமுக செயலாளருமான எஸ்.ஏ.சத்யா மாநகராட்சி மேயராக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாநகராட்சிகளில் ஒசூா் மாநகராட்சி உள்பட 3 மாநகராட்சிகளின் துணை மேயா் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஒசூா் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 3 வாா்டுகளில் போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. மாமன்ற துணை மேயா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இந்திராணி துணை மேயராக வாய்ப்பு உள்ளது.
இதனிடையே, மேயா் வாய்ப்பு குறித்து செய்தியாளா்களிடம் பேசிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ‘ஒசூா் மாமன்ற துணை மேயா் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வாா்’ என்றாா்.