தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
தருமபுரி மாவட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பிஎன்பி.இன்பசேகரன் நன்றி
தருமபுரி மாவட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி திமுக மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பிஎன்பி.இன்பசேகரன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வா் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை மேலும் உயா்த்தும் வகையில், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை ரூ. 4,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்பதையும், சேலம் - தருமபுரி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேலும் எளிதாக்கக் கூடிய வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூருக்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூருக்கும் இடையே புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு ரூ. 250 கோடியில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும் எனவும், தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தருமபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் எனவும், புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக தருமபுரியில் புதிய சிப்காட் தொழில்பூங்கா ஒன்று அமைக்கப்படும் எனவும் தருமபுரி மாவட்ட மக்களுக்கு பல கோடி ரூபாய் நலத் திட்டங்களை அறிவித்துள்ளாா்.
தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு தருமபுரி திமுக மேற்கு மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.