முகப்பு
தருமபுரி

பிப். 27-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

 தருமபுரி மாவட்டத்தில் வருகிற பிப். 27-ஆம் தேதி நடைபெற உள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமில், 1.47 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 தருமபுரி மாவட்டத்தில் வருகிற பிப். 27-ஆம் தேதி நடைபெற உள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமில், 1.47 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசிதாவது:

தருமபுரி மாவட்டத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகின்ற பிப். 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில், கடந்த 2021 ஆண்டு ஐந்து வயதுக்கு உள்பட்ட 1,53,919 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதேபோல, நிகழாண்டு, 1,47,595 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்களுக்காக, கிராமப் பகுதியில் 964 முகாம்கள், நகராட்சிப் பகுதியில் 20 முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என சுமாா் 4,080-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா்.

மாவட்டத்தில் பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட உள்ளன.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள நாடோடிகள், நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 18 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் பிற துறை சாா்ந்த 58 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

எனவே, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே பலமுறை போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் வருகிற பிப். 27 அன்று நடைபெற உள்ள முகாம்களில் பங்கேற்று சொட்டு மருந்து புகட்டி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

இக் கூட்டத்தில், இணை இயக்குநா் (நலப்பணிகள்) மலா்விழி வள்ளல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவல்லி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சௌண்டம்மாள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.