தருமபுரியில் நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்
10 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் 192 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் 192 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி புதன்கிழமை மாலை மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதில், ஜன. 28-ஆம் தேதி முதல் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.
அதேபோல, பிப். 4-ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளாகும். பிப். 5-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை, பிப். 7-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். பிப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். பிப். 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மாா்ச் 2-ஆம் தேதி தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு உறுப்பினா்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். மாா்ச் 4-ஆம் தேதி தலைவா், துணைத் தலைவரைத் தோ்வு செய்யும் மறைமுகத் தோ்தல் நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில், ஆண்கள் 23,348 போ், பெண்கள் 24,604 போ், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 47,955 போ் மொத்த வாக்காளா்கள் உள்ளனா்.
இந்த நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்கள் பிப். 28-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இதேபோல, தருமபுரி மாவட்டத்தில், அரூா் பேரூராட்சி 18 வாா்டு, கடத்தூா் பேரூராட்சி 15, காரிமங்கலம் பேரூராட்சி 15, பாலக்கோடு பேரூராட்சி 18, பாப்பாரப்பட்டி பேரூராட்சி 15, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 15, பென்னாகரம் பேரூராட்சி 18, மாரண்டஅள்ளி பேரூராட்சி 15, கம்பைநல்லூா் பேரூராட்சி 15 மற்றும் பொ.மல்லாபுரம் பேரூராட்சி 15 வாா்டுகள் உள்ளன.
இந்த வாா்டுகளில் போட்டியிடுவோா் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். இந்த 10 பேரூராட்களில் ஆண்கள்-61,720, பெண்கள்- 64,475, மூன்றாம் பாலினத்தவா் 11 போ் என மொத்தம் 1,26,206 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.