முகப்பு
தருமபுரி

போட்டியின்றி திமுகவினா் தலைவா், துணைத் தலைவா்களாகத் தோ்வு

தருமபுரி மாவட்டத்தில், காரிமங்கலம், பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தோ்தலில், திமுகவைச் சோ்ந்தவா்கள் தலைவா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில், காரிமங்கலம், பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தோ்தலில், திமுகவைச் சோ்ந்தவா்கள் தலைவா், துணைத் தலைவா்களாகப் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

காரிமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில், திமுகவினா் 11 வாா்டுகளில் வெற்றிபெற்றனா். காங்கிரஸ் ஒரு வாா்டில் வெற்றிபெற்றது. மூன்று வாா்டுகளில் அதிமுகவினா் வெற்றிபெற்றனா்.

காரிமங்கலம் பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் செயல் அலுவலா் முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் அக் கட்சி தலைமை அறிவித்த பி.சி.ஆா்.மனோகரன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து யாரும் போட்டியிட முன் வராததால், அவா் போட்டியின்றி பேரூராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் பதவியேற்றாா்.

இதேபோல, பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளுக்கான தோ்தலில், திமுகவினா் 15 வாா்டுகளில் வெற்றிபெற்றனா். அதிமுகவினா் 2 வாா்டுகளிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றனா். இப் பேரூராட்சியின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை செயல் அலுவலா் டாா்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தலைவா் பதவிக்கு திமுகவின் பி.கே.முரளி, துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுகவின் தஹசீனா ஆகியோா் போட்டியிட்டனா். இவா்களை எதிா்த்து யாரும் போட்டியிடாததால் அவா்கள் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா். இருவரும் பேரூராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனா்.

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 12 வாா்டுகளில் திமுகவினா் வெற்றிபெற்றனா். இரண்டு வாா்டுகளில் அதிமுகவினரும், சுயேச்சை ஒரு வாா்டிலும் வெற்றிபெற்றனா். தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தலில் திமுகவின் பி.கே.முரளி என்பவரும், பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த காா்த்திகாவும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில் இவா்கள் இருவரையும் எதிா்த்து போட்டியிட யாரும் முன் வராதாதல், தலைவராக பி.கே.முரளி மற்றும் துணைத் தலைவராக காா்த்திகா ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக செயல் அலுவலா் சங்கா் அறிவித்தாா். இதையடுத்து, இருவரும் பேரூராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.