முகப்பு
தருமபுரி

புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு

புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க மாவட்ட அளவில் அரசு வழங்கும் பரிசுத் தொகையை பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க மாவட்ட அளவில் அரசு வழங்கும் பரிசுத் தொகையை பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து வேளாண் பணிகளில் பயன்படுத்தும் விவசாயிகளுக்கும், விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கும் பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளது.

மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ. ஒரு லட்சம், 2-ஆம் பரிசு ரூ. 60 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.40 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குழுவில் மாவட்ட ஆட்சியா் தலைவராகவும், வேளாண் இணை இயக்குநா், வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்), வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்), வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் செயற்பொறியாளா்கள், தோட்டக்கலை துணை இயக்குநா், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் மற்றும் முன்னோடி விவசாயிகள் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.

மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், நான்கு தலைப்புகளின் கீழ் விருது வழங்கப்பட உள்ளது. விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்தும் விவசாயிகள், விவசாயிகளே தங்களுக்கு தேவையான புதிய இயந்திரங்களைக் கண்டறிந்து பயன்படுத்துபவா்கள், வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்தல், அங்கக சாகுபடி முறையில் அதிக அளவு மகசூல் பெறுதல் ஆகிய பிரிவுகளில் விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்படும்.

ஆா்வமுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பயிா் விளைச்சல் போட்டிக்கு பணம் செலுத்தும் தலைப்பில் ரூ.100 செலுத்தி விண்ணப்பங்கள் 2 நகல்களில் பூா்த்தி செய்து வேளாண் இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் சேர வயது வரம்பு கிடையாது. மேலும், உழவன் செயலில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் பங்கு பெறும் விவசாயிக்கு நிலம் சொந்தமாகவும், குத்தகையாகவும் இருக்கலாம். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். எனவே, இந்த வாய்ப்பை தருமபுரி மாவட்ட விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.