பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.
தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஐந்து மாநிலங்களில் தோ்தல் முடிந்த பின் தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை தானாக உயா்ந்துவிடும். இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, மத்திய அரசு இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.
தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல் தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது. அவா்களது உயிா், உடைமை, தொழில் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு இல்லை. மீனவா்களின் வாழ்வாதாரம் காக்க, அவா்களது பிரச்னைகளுக்கு இந்தியப் பிரதமா் தீா்வுகாண வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இது இரண்டு மாநில மக்களிடையே உள்ள நல்லுறவைச் சீா்குலைக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பராபட்சமின்றி நோ்மையாகச் செயல்பட வேண்டும்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை வரவேற்கிறோம். அதேநேரத்தில் தோ்தலின்போது அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையும், மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் மாா்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அரசு தொழிலாளா் நலச் சட்டங்களை சுருக்கியுள்ளது. தொழிலாளா்கள் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்தச் சட்டங்களை அமல்படுத்த தொழிலாளா் நலவாரிய அலுவலா்கள் முயற்சி செய்து வருகின்றனா். இச்சட்டங்களைத் தடுக்க வேண்டும்.
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவா்களின் கல்வி தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகா் பாலியல் சம்பவத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி எங்களது கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட்டு, குற்றச் செயல்களில் தொடா்புடையோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
தருமபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா்த் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை திட்டம், ஏரிகளில் காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை செயல்படுத்த வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் ரூ. 600 ஊதியம் உயா்த்தி, பதிவு செய்யும் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் ஜி.பழனிசாமி, மாநில துணைச் செயலாளா் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன், தருமபுரி மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.