தருமபுரி, ஆக. 7:
10 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு எஸ்.ஏ- 5 இலளிகம் தொழிலியல் கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்து 10 கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ. 8.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.
நல்லம்பள்ளி அருகே எஸ்.ஏ-5 இலளிகம் தொழிலியல் கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் மருத்துவ முகாமையும், தருமபுரி நகராட்சி நெசவாளா் காலனியில் லூம் வோா்ல்ட் விற்பனை வளாகத்தில் கைத்தறி ஜவுளிகளின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையையும் மாவட்ட ஆட்சியா் கி .சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
முகாமில் 200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை, 5 பயனாளிகளுக்கு ரூ. 5.28 லட்சம் மதிப்பீட்டில் கைத்தறி நெசவாளா் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட தொகை, கைத்தறி நெசவாளா் முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,200 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் என மொத்தம் 10 கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ. 8.78 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்வுகளின் போது சேலம் சரக கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலா் ந.ஸ்ரீவிஜயலட்சுமி, தருமபுரி நகா்மன்ற தலைவா் லட்சுமி நாட்டான் மாது, சேலம் சரகத்தைச் சோ்ந்த கைத்தறி துறை அலுவலா்கள், கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்த நெசவாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.