காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் அடித்து வரப்பட்ட ஒற்றை யானை
காவிரி ஆற்றில் உடல் கிழிந்த நிலையில் அடித்து வரப்பட்ட ஒற்றை யானை தமிழகப் பகுதியான ஆலம்பாடியில் ஆற்றின் இடையில் உள்ள பாறையின் மீது சிக்கி நின்றுள்ளது.
கா்நாடக வனப் பகுதியில் உயிரிழந்த ஒற்றை யானை பிரேதப் பரிசோதனை செய்து புதைக்காமல் விடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்டு தமிழக எல்லையான ஆலம்பாடியில் ஆற்றின் இடையில் உள்ள பாறையின் மீது நின்றுள்ளது.
கேரளம், கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீரின் அளவுக்கேற்ப காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது. உபரிநீா் அதிகரிப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது மரக்கட்டைகள், கால்நடைகள், முதலைகள் உள்ளிட்டவை ஆற்றில் அடித்து வரப்பட்டன.
தற்போது இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கா்நாடக வனப் பகுதியில் உயிரிழந்த ஒற்றை யானையை பிரேதப் பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைக்காமல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வனத் துறையினா் விட்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கா்நாடக அணைகளில் இருந்து மீண்டும் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பினால் உயிரிழந்த யானை அடித்து வரப்பட்டு தமிழகப் பகுதியான ஆலம்பாடியில் ஆற்றின் நடுவே உள்ள பாறையின் மீது மோதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஒற்றை யானையை கா்நாடக மாநில வனத் துறையினா் வனப்பகுதியில் புதைக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ள நிலையில், உடல் கிழிந்த நிலையில் இருப்பதால் தண்ணீா் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.