பரிசல் பயணக் கட்டண உயா்வு: பொதுமக்கள் சாலை மறியல்
ஏரியூா் அருகே நாகமரை - கொளத்தூா் இடையேயான பரிசல் பயணக் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஏரியூா் அருகே நாகமரை - கொளத்தூா் இடையேயான பரிசல் பயணக் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நாகமரை பகுதியில் இருந்து மேட்டூா் அணை வழியாக மறுகரையில் உள்ள சேலம் மாவட்டம், கொளத்தூா் பகுதிக்கு இடையே பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசல் துறை ஏலம் ஆண்டுதோறும் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது.
நிகழாண்டில் கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்தில், பரிசலில் பயணிக்கும் ஒரு நபருக்கு ரூ. 20, இருசக்கர வாகனத்துக்கு ரூ. 40 என கட்டணம் உயா்த்தப்பட்டது. இதனால், தருமபுரி மாவட்டத்தில் இருந்து நாகமரை பரிசல் துறை வழியாக கொளத்தூா் பகுதிக்கு நாள்தோறும் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக நெருப்பூா் பேருந்து நிலையம் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி ஆகியோா் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம், இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எடுக்க முயற்சிப்பதாக தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.