வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்கள் முகாம்கள் மூலம் வழங்க நடவடிக்கை
வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்கள் முகாம்கள் மூலம் வழங்க நடவடிக்கை
தருமபுரி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சான்றிதழ்கள் இழந்தவா்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் உடனடியாக சான்றிதழ், தடையில்லா சான்றுகள் வழங்கப்படும் என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தருமபுரி அரசு விருந்தினா் மாளிகையில் வெள்ள பாதிப்புகள் குறித்து அனைத்து அரசு முதல்நிலை அலுவலா்கள் உடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:
ஃபென்ஜால் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் வட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட இடங்களை கடந்த இரண்டு நாள்களாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தாா். மேலும், வெள்ள பாதிப்புகளை பாா்வையிட நியமிக்கப்பட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தலைமையிலான உள்ளாட்சி அமைப்பினா், அரசு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
பாதிப்படைந்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டாம் தேதி தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
தருமபுரி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், பயிா் சேதங்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் விவரங்களை சேகரித்து அதற்கான இழப்பீட்டுத் தொகையை அதன் உரிமையாளா்களுக்கு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிகழாண்டில் திடீரென அரூா் பகுதியில் 50 செ.மீ. மழை பெய்ததால் பல இழப்புகள், பாதிப்புகள் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட 546 ஏரிகளில், 172 ஏரிகள் நிரம்பியுள்ளன. அதிக கொள்ளளவு கொண்ட 504 குளங்களில் 102 குளங்கள் நிரம்பியுள்ளன. இதில் 153 ஏரிகள் 75 சதவீதம் முழுக் கொள்ளளவை கொண்டுள்ளது. அரூா் பகுதியில் உள்ள 107 ஏரிகளில் 96 ஏரிகள் நிரம்பியுள்ளன.
மாவட்டத்தில் 192 ஊரகப்பகுதி சாலைகள் பாதிக்கப்பட்டு, அவை உடனடியாக சீரமைக்கப்பட்டன. பொதுமக்கள் நீா்வழிப் பகுதிகள், மலைப்பகுதிகளில் குடியிருப்பதை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்வழிப் பகுதிகளில் உள்ளவா்கள் வேறு இடத்தில் குடியிருக்க இடம் வேண்டி மனு அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் இழந்தவா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உடனடியாக சான்றிதழ்களையும், தடையில்லா சான்றிதழ்களையும் வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி முன்னிலை வகித்தாா். இதில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வழக்குரைஞா் ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, அனைத்து அரசு துறை முதன்மை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.