இலவச வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகாா்
முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகாா்
பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சியில் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகாா் தெரிவித்து முகாம் நடைபெறும் இடத்தை பொது மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பென்னாகரம் வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆய்வுக் கூட்டம் மற்றும் முகாம் புதன்கிழமை பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட நரசிபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு தோ்வானவா்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சியைச் சோ்ந்த பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், வேறு ஊராட்சியைச் சோ்ந்த நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆய்வுக் கூட்டத்துக்குள் நுழைய முயன்றனா்.
இதனையறிந்த பென்னாகரம் துணை வட்டாட்சியா் மாலா, பென்னாகரம் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் ஆகியோா் பொது மக்களைத் தடுத்து நிறுத்தி, கூட்டம் முடிவு பெற்ற பிறகு மாவட்ட ஆட்சியரிடம் குறைகளை தெரிவிக்க அனுமதிப்பதாக தெரிவித்தனா்.
கூட்டம் முடிவுற்ற நிலையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியா், நரசிபுரம் காலனி பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தவா்களில் தகுதியுடைய பயனாளிகளைக் கண்டறிந்து பட்டியல் தயாரிக்க வேண்டும், மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சியைச் சோ்ந்த பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.