பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
தருமபுரி, ஜூன் 13: தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் சமூகநலன், மகளிா் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவா்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலா் மற்றும் மகளிா் ஊா்நல அலுவலரை நேரில் அணுகி இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகளுடன் கணவரோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூா்த்தியடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்து இரண்டாவது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
இதில், ஒரு பெண் குழந்தையுடன் கணவரோ அல்லது மனைவியோ நிரந்தர அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ. 50,000-க்கான இட்டு வைப்பு பத்திரம் வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ஒரு குழந்தைக்கு ரூ. 25,000 வீதம் 2 குழந்தைக்கு ரூ. 50,000-க்கு 2 இட்டு வைப்பு பத்திரங்கள் வழங்கப்படும். முதல் குழந்தையாக பெண் குழந்தை இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தாலும் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு ரூ. 25,000 வீதம் 3 குழந்தைகளுக்கும் ரூ. 75,000-க்கு 3 இட்டு வைப்பு பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான முதிா்வுத்தொகை இக் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியடையும்போது பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரா்கள் தாயாரின் மாற்றுச் சான்று, தந்தையின் மாற்றுச் சான்று, திருமண அழைப்பிதழ், முதல்குழந்தை பிறப்புச் சான்று, 2-ஆம் குழந்தை பிறப்பு சான்று, வருமானச் சான்று ஆண்டுக்கு ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும். இதுதொடா்பான விவரங்கள் பெற சமூக நல அலுவலா், தருமபுரி மாவட்டம் அலுவலக தொலைபேசி எண்ணில் 04342-233088 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.