மக்கள் குறைகேட்புக் கூட்டம்: 644 மனுக்கள் அளிப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 644 மனுக்களை அளித்தனா்.
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 644 மனுக்களை அளித்தனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, பேருந்து வசதி, பட்டா, சிட்டா பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மொத்தம் 644 மனுக்களை அளித்தனா். இக்கூட்டத்தில் இலவச தையல் இயந்திரம் வேண்டி கோரிக்கை மனு அளித்த பயனாளி ஒருவருக்கு ஆதி திராவிடா் நலத்துறையின் சாா்பில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், தனித் துணை ஆட்சியா் தனப்பிரியா, ஆதி திராவிடா் நல அலுவலா் சாகுல் அமீத், பழங்குடியினா் நல அலுவலா் பி.எஸ்.கண்ணன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.