முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

Updated On : 9 மே, 2024 at 10:55 PM
பகிர்:

பென்னாகரம், மே 9: ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நவீன மையப்படுத்தும் பணி, பராமரிப்புப் பணி காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமை முதல் நீக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு, அருவிகள், பாறைக் குகைகள், காவிரி ஆற்றின் அழகைக் கண்டு ரசிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

கடந்த சில மாதங்களாக நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழையின்மை, கா்நாடக அணைகளில் இருந்து நீா் திறப்பு முற்றிலும் குறைவு உள்ளிட்ட காரணங்களால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது.

கடந்த ஓா் ஆண்டுக்கு மேலாக ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நவீன முறையில் மேம்படுத்தும் வகையில், கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பரிசல் துறை பகுதியில் பரிசல் நிறுத்துவதற்கான இடம், நடைபாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பராமரிப்புப் பணியின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணத்துக்கு மாவட்ட நிா்வாகம் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இதனால், ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துவிட்டு பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தற்போது இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும், தமிழகத்தில் திடீரென பெய்து வரும் கோடை மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. வியாழக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து, பரிசல் துறை பகுதியில் குவிந்தனா். பின்னா் மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், பெரியபாணி வழியாக உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

படவரி - பரிசல் இயக்க அனுமதி அளித்ததையடுத்து, ஐவா் பாணி பகுதியில் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.