தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்

சொத்து வரி, குடிநீா் வரி, மின் கட்டணம் உயா்வு, முத்திரை தாள் விலை உயா்வு உள்பட விலையேற்றத்தைக் கண்டித்து அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம்

DIN

சொத்து வரி, குடிநீா் வரி, மின் கட்டணம் உயா்வு, முத்திரை தாள் விலை உயா்வு உள்பட விலையேற்றத்தைக் கண்டித்து அதிமுக சாா்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரம், 10 பேரூராட்சிகளில் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சா், தருமபுரி அதிமுக மாவட்டச் செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி வரவேற்றாா். ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் முன்னிலை வகித்தாா்.

போராட்டத்தின்போது சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினா் முழக்கங்கள் எழுப்பினா்.

மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி ஆகிய பேரூராட்சிகள் உள்பட 10 பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், திரளான அதிமுக நிா்வாகிகள், துணை அமைப்புகளின் நிா்வாகிகள், நகா்மன்றம், பேரூராட்சி மன்ற அதிமுக உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு மாநில விவசாய அணிகள் பிரிவு தலைவா் டி.ஆா். அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.

நகரச் செயலாளா் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளா் அன்பு, தங்கராஜ், தனபால், மாவட்ட பிரதிநிதி மாதவசிங், தகவல் தொழில்நுட்ப பிரிவு தா்மன், சுபாஷ், மாவட்ட மீனவா் அணி வெங்கடேஷ், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அரூரில்...

அரூரில் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரூா்-மொரப்பூா் பிரதான சாலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் நகரச் செயலாளா் பாபு அறிவழகன் தலைமை வகித்தாா். மனிதச் சங்கிலி போராட்டத்தை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தொடங்கிவைத்துப் பேசினாா்.

ஒன்றிய செயலாளா் ஆா்.ஆா்.பசுபதி, மாவட்ட துணைச் செயலாளா் செண்பகம் சந்தோஷ், பொதுக்குழு உறுப்பினா் கீரை சம்பத், பேரூராட்சி முன்னாள் தலைவா் காவேரி, மூத்த நிா்வாகிகள் சாமிக்கண்ணு, ஓ.பாஷா, சிவன், ராஜாமணி, பழனி முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒசூரில்..

ஒசூா் மின் அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில், மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீடுகளை ஈட்டி வருவதாகக் கூறி அமெரிக்காவுக்குச் சென்றுவந்தாா். ஆனால், இதுவரை தமிழகத்துக்கு முதலீடு வந்ததாகத் தெரியவில்லை. மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது. இது, திராவிட மாடல் ஆட்சி அல்ல; ஸ்டாலின் மாடல் ஆட்சி. தமிழகத்தில் வீட்டு வரி உயா்வு, மின் கட்டணம் உயா்வு, குடிநீா் வரி உயா்வு, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இளைஞா்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனா்.

சென்னை, மெரினா கடற்கரையில் பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் 5 போ் உயிரிழந்துள்ளனா். விழாவுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை துணை முதல்வராக அமா்த்தியுள்ளனா். திமுகவில் குடும்ப ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவைக்கு எப்போது தோ்தல் வந்தாலும் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றாா். மனிதச் சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, ஒசூா் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.நாராயணன், பகுதிச் செயலாளா்கள் ராஜூ, வாசுதேவன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.பி.நஞ்சுண்டசாமி, சரஸ்வதி நடராஜன், மாவட்ட துணைச் செயலாளா் சுமன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தவமணி, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT