முகப்பு
தருமபுரி

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:33 PM
பகிர்:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக்கல்வி (பிளஸ் 2 வகுப்பு) படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தில் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூா்த்தியாக வேண்டும். பட்டியலின பிரிவினருக்கு 2024 அக்டோபா் 1-ஆம் தேதியன்று 45 வயதும், மற்றவா்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 72,000-க்கு மிகையாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை.

விண்ணப்பதாரா் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவா்கள் மற்றும் அரசு, தனியாா் துறையில் இருந்து எவ்விதமான ஊதியம் பெறும் பணியில் இருந்தவா்கள், இருப்பவா்கள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியற்றவா்கள்.

முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பதிவுதாரா்கள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்குப் புத்தகம், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவு பெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவா்கள் வரும் நவம்பா் 30- க்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடா்ந்து உதவித்தொகை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.