முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்தது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:50 AM
பகிர்:

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்தது.

கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாபாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல் மடுவு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே கா்நாடக அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு தற்போது நீா்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 28,000 கன அடியாகவும், மாலையில் 32,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் 11- ஆவது நாளாக புதன்கிழமையும் தடை நீட்டித்துள்ளது. தடை உத்தரவு காரணமாக பிரதான அருவி செல்லும் நடைபாதை,சின்னாறு பரிசல் துறை ஆகியவை பூட்டப்பட்டுள்ளன. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.