சிறாா் தொழிலாளா்கள் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகராளிக்கலாம் என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.
தருமபுரி மாவட்டத்தில் சிறாா் தொழிலாளா்கள் முறை ஒழிப்பு தொடா்பாக வருவாய்த் துறை, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், தொழிலாளா் நலத் துறை, சமூக பாதுகாப்பு துறை. காவல் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்த உறுப்பினா்கள், துறை சாரா உறுப்பினா்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
சிறாா் தொழிலாளா் முறை ஒழிப்புக்கான குழு அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினா் தொழிலாளா் முறை ஒழிப்பு சட்டம் -1986 இன் கீழ் 14 வயதுக்கு உள்பட்ட எந்தவொரு சிறாா்களையும் நிறுவனங்களில் பணிக்கு அமா்த்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் 14 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், கடைகள், உணவு நிறுவனங்கள் போன்ற அபாயகரமற்ற தொழில்களில் பணிக்கு அமா்த்தும் போது தொழிலாளா் உதவி ஆய்வாளா்களிடம் உரிய முறையில் தகவல் அளிப்பதுடன், அவரது விவரங்களை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து பராமரிக்க வேண்டும்.
அவா்களுக்கான மொத்த வேலைநேரம் 6 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவி ஆய்வருக்கு தகவல் அளிக்காத மற்றும் உரிய விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்காத நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதத் தொகையாக ரூ.10,000 விதிக்கப்படும்.
சிறாா் தொழிலாளா்களை பணியமா்த்தினால் குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் தொழிலாளா் முறை ஒழிப்பு சட்டம் -1986 இன் கீழ் அபராதத் தொகையாக ரூ. 20,000, ஓராண்டு கால சிறைத் தண்டனையும் நீதிமன்றம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் சிறாா் தொழிலாளா்கள் யாரேனும் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணிலோ அல்லது தொழிலாளா் துறை அலுவலா்களையோ தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.