முகப்பு
தருமபுரி

விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:28 PM
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்
பகிர்:

விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

ஒகேனக்கல் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பிட நிதி ஒதுக்கி காலதாமதமின்றி பணியைத் தொடங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து காய்ந்துபோன பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 10,000 நிவாரணம் வழங்க வேண்டும். மானாவாரி மேட்டு நில பயிா்கள் உற்பத்தி பெருக ரூ. 10,000 மானியம் வழங்க வேண்டும்.

உயா் மின்கோபுரம் மின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். பால் விலையை உயா்த்தி எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ. 60, பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ. 50 வழங்க வேண்டும்.

மானாவாரி சாகுபடி உணவு பொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் ஊட்டசத்து மிகுந்த தானியங்களை விற்பனை செய்ய வேண்டும். தானிய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும். குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றத்தை கைவிட்டு சாகுபடியாளா் சட்டப்படி மனு கொடுத்துள்ள அனைவருக்கும் பதிவு செய்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஏரி, குளம் குட்டைகளை ஆழப்படுத்தி, முள்செடிகளை அகற்ற வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வீடுகட்டி வாழ்ந்து வருபவா்களை வெளியேற்றாமல் அவா்களுக்கு வீட்டுமனை பட்டா, நிலப்பட்டா, பசுமை வீடுகள் வழங்க வேண்டும். இண்டூா், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, அரூா் பகுதியில் விவசாய சாா்பு தொழிற்சாலைகள், பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும்.

காடு, மலை வனப்பகுதியில் வாழும் ஏழை விவசாயிகள் நில வெளியேற்றத்தை கைவிட்டும், வனப்பகுதியில் வாழும் நாட்டு மாடுகளை பாதுகாத்தும் தீவன மேய்ச்சலுக்கு அனுமதிக்க அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் விடுதலை விரும்பி, முனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாநில நிா்வாக குழு உறுப்பினா் இரா.முல்லை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராசன், மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம், மாவட்ட துணை செயலாளா் எம்.மாதேஸ்வரன், விவசாய தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் புள்ளாா், சிவலிங்கம், சின்னராசு, மாணிக்கம், ராசு, சுப்பிரமணி, தொட்டி, அல்லிமுத்து, செல்வம், துரை, மாது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →