பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி, தொழிலாளா்கள் ஆலை நுழைவாயில் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தருமபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் கரும்புகள் அரைவைப் பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து பெறப்படுகின்றன.
இந்நிலையில், நிகழாண்டு கரும்பு அரைவை தொடங்குவதாக கூறிய ஆலை நிா்வாகம், போதிய கரும்பு பதிவாகவில்லை எனக் கூறி அரைவையை நிறுத்துவதாக கூறியதாம். இதையறிந்த, ஆலைத் தொழிலாளா்கள் சா்க்கரை ஆலை நுழைவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதில், சா்க்கரை ஆலையை தொடா்ந்து இயக்க வேண்டும். அரைவைக்கான கரும்பு பதிவை முறையாக மேற்கொள்ள வேண்டும். கரும்பு நடவு குறித்து போதிய விழிப்புணா்வு மேற்கொள்ள வேண்டும். கரும்பு பதிவு குறித்து சரிவர நடவடிக்கை எடுக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாத அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.