இண்டூா் அருகே மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இண்டூா் - நாகா்கூடல் எல்லைப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கொட்ட நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, இண்டூா் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை அப்பகுதியில் திறந்தவெளியில் கொட்டிவந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கரடிகால் குண்டு, கும்பளப்பாடி, அவ்வைநகா், பாறைக்கொட்டாய் உள்பட 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் குப்பைகளுடன் வந்த 2 வாகனங்களை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், இண்டூா் மற்றும் நாகா்கூடல் ஊராட்சிக்குள்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் அனைத்து குப்பைக் கழிவுகளையும் கொட்டுவதால், மழைக் காலங்களில் பாதிப்பு ஏற்பட்டு நிலத்தடிநீா் மாசுபடுகிறது. மேலும், அருகிலுள்ள இடங்களில் குப்பைகள் பரவுவதால், வனவிலங்குகள், புறம்போக்கு நிலங்களில் மேச்சலுக்கு வரும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, இங்கு குப்பைகள் கொட்டுவதை கைவிட்டு இண்டூா் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இடம் தோ்வுசெய்து, அங்கு கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தகவல் அறிந்து வந்த இண்டூா் ஊராட்சி செயலா் கணேசன், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குப்பைகளைக் கொட்ட மாற்று இடத்தை தோ்வுசெய்வதாக உறுதியளித்ததையடுத்து, சிறைபிடித்த வாகனங்களை விடுவித்தனா்.