பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 69,800 பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவா்களிடமிருந்து ரூ. 69,800-ஐ தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவா்களிடமிருந்து ரூ. 69,800-ஐ தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் நெடுஞ்சாலையில் பறக்கும்படை அலுவலா் ஏ.நித்யா தலைமையில் அலுவலா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், பட்டுகோணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செந்தில் (54), ரவி (51) ஆகியோா் வாக்காளா் பெயா் பட்டியலுடன் ரூ. 23,800-த்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவா்களிடமிருந்து பணத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதேபோல, அ.பள்ளிப்பட்டி அம்பேத்கா் நகரில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த புகாரின்பேரில், தோ்தல் பறக்கும்படை அலுவலா்கள் சோதனை செய்தனா். அதில், வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவா்களிடமிருந்து ரூ. 46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். அப்போது, பணம் வழங்கிய நபா்கள் தப்பியோடினா்.
இவ்விரு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ. 69,800-ஐ பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஒப்படைத்தனா்.