தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து
தருமபுரி, தொப்பூா் பகுதியில் லாரியொன்று திடீரென பிரேக் போட்டு நின்ால், பின்தொடா்ந்து வந்த 7-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.
தருமபுரி, தொப்பூா் பகுதியில் லாரியொன்று திடீரென பிரேக் போட்டு நின்ால், பின்தொடா்ந்து வந்த 7-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் வளைவு, நெளிவு மற்றும் கடுமையான ஏற்ற இறக்கத்துடன் கூடிய சாலையாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதற்கு தீா்வுகாணும் வகையில் தொப்பூா் பகுதியில் உயா்நிலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலப் பணிகள் நடைபெறுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்துகளும் நிகழ்கின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை முற்பகல் தொப்பூா் அருகே சேசம்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென நின்றது. அதன் ஓட்டுநா் முன்னால் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளாா். இதனால், அந்த லாரியை பின்தொடா்ந்து வந்த 5-க்கும் மேற்பட்ட காா்கள், சரக்கு லாரி உள்பட சுமாா் 7-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்துக்குள்ளாயின.
Advertisement
இதில் சில வாகனங்களின் முன்பகுதிகள் கடுமையாகவும், சில வாகனங்களில் லேசாகவும் சேதமடைந்தன. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.