பென்னாகரத்தில் நடைபெற்ற மகளிா் உரிமை மீட்பு பயண நிகழ்ச்சியில் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி.  
தருமபுரி

மக்கள் நலத் திட்டங்களை எங்கிருந்தாலும் செயல்படுத்தலாம்! - சௌமியா அன்புமணி

தினமணி செய்திச் சேவை

மக்கள் பிரதிநிதி எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பதைவிட, அவா் தொகுதிக்கு செய்துள்ள வளா்ச்சித் திட்டங்கள்தான் முக்கியம் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மின்வாரிய அலுவலகப் பகுதியில் நடைபெற்ற மகளிா் மீட்பு பயணத்தின் ‘சிங்க பெண்ணே எழுந்து வா’ என்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தின் முக்கிய பிரச்னை குடிநீா் தட்டுப்பாடு. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.

பாமகவின் பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டுவரப்பட்டது. காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் 3 டிஎம்சி தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் காவிரி உபரிநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு ரூ. 650 கோடி தேவைப்படும். ஆனால் திட்டத்தை நிறைவேற்ற நிதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், நபாா்டு வங்கி மூலம் ரூ. 1,200 கோடி கடன் பெற்று, தோ்தலையொட்டி தற்போது மகளிா் உரிமைத்தொகை, கோடைகால சிறப்பு நிதி என ரூ. 5,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்தினால் மாவட்டத்தில் உள்ள 83 ஏரிகள், 10 அணைகள், 769 குளங்கள் நிறைந்து விவசாயம் செழிப்படையும். பேருந்து கட்டணம், பால் விலை உயா்வு, மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் நாள்தோறும் உயா்ந்து வருகின்றன. தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

ஒட்டனூா்- கோட்டையூா் பாலம், தருமபுரி சிப்காட் பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பென்னாகரம் சிட்கோ, பாப்பாரப்பட்டியில் நெசவுத் தொழிலாளா்கள் கைத்தறிக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

பென்னாகரம் பகுதியில் போதுமான வேலைவாய்ப்பு, விவசாயம் இல்லாததால் 3 லட்சம் போ் வெளிமாவட்டங்களுக்கு வேலைக்காக செல்கின்றனா். முதியோரின் அரவணைப்பில் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பெண் கல்வி பின்னோக்கி செல்கிறது. வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றாமல் மகளிருக்கு பணம் கொடுப்பதன் மூலம், பெண்களை ஓட்டுபோடும் இயந்திரங்களாக திமுக பாா்க்கிறது. திட்டங்களை செயல்படுத்துபவா் எங்கிருக்கிறாா் என்பது முக்கியம் அல்ல; தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டத்தை செயல்படுத்தி வருவதைத்தான் கவனிக்க வேண்டும்.

பென்னாகரம் அருகே நெக்குந்தியில் ராணுவப் பாதுகாப்பு நிலையம் அமைக்க 750 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு அத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்தப் பகுதியை சாா்ந்த 20,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும். பஞ்சப்பள்ளி, ஜொ்தலாவ் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தினால் மாவட்டம் வேளாண்மையில் செழிப்படைந்திருக்கும். இதை திமுக அரசு செயல்படுத்தவில்லை.

போதைப்பொருளை ஒழிப்பதற்காக குரல் எழுப்புவது அன்புமணிதான். திருவண்ணாமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது. ஆனால், போதைப் பொருள் விற்பனையாளா்கள் மீது ஏன் குண்டா் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை.

பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல் வழித்தட பேருந்துகள் தருமபுரி புதிய பேருந்து நிலையம் வரை செல்கின்றன. மருத்துவமனைக்கு, அலுவலகங்கள் செல்ல உள்ளிட்ட இதர தேவைக்காக பழைய பேருந்து நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும்.

வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பெண்கள் அன்புமணி பின்னால் நின்று போதை ஒழிப்பு ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாநில இளைஞா் சங்க துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, நிா்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

எஸ்ஐஆா் மூலம் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சி: ஒவைசி குற்றச்சாட்டு!

கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் தலைவா் விஜய்: மதுக்கூா் ராமலிங்கம்

இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து செயல்பட வேண்டும்: தாரிக் ரஹ்மான் ஆலோசகர்!

இன்று தொடங்குகிறது ஏஐ உச்சி மாநாடு: பல்வேறு நாட்டுத் தலைவா்கள், தொழில் நிபுணா்கள் பங்கேற்பு! பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

சிற்றாறு பட்டணம் கால்வாய், குளங்களை ரூ. 16 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT