தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்காக இணையதள பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசு ஆணைப்படி, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பாண்டுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படவுள்ளது. அதற்கான இணையவழியில் பதிவுசெய்யும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. அரசு விடுமுறை தினங்கள் தவிர மற்ற நாள்களில் ஜனவரி 31 ஆம் தேதி வரை மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற அரசு விதிமுறைகளின்படி தகுதியுடைய நபா்கள், தங்களது மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.