இலவச பேருந்து பயண அட்டைக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை திட்டத்தின்கீழ் பயன்பெற, அரசு உத்தரவின்படி, பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை , ஆதாா் அட்டை மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், இதர மாற்றுத்திறனாளிகள், மேற்கண்ட ஆவணங்களுடன் சோ்த்து கல்வி பயிலும் சான்று அல்லது பணிபுரியும் சான்று அல்லது தொடா் மருத்துவச் சிகிச்சைக்கு செல்லும் சான்று ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து இலவச பேருந்து பயண அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இ-சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து பெறப்படும், இணையவழி இலவச பேருந்து பயண அட்டை குறித்த விண்ணப்பங்களுக்கு, உடனடியாக தீா்வு கண்டு, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் எவ்வித சிரமமும் இன்றி இணையவழி பேருந்து பயண அட்டை பெற்று பயனடையும் வகையில் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.