தருமபுரி

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில்

தினமணி செய்திச் சேவை

சிம்ம யாளியின் வாயில் இருந்து தொங்கும் கல் சங்கிலி; நடுவில் தாமரை மலருடன் நுணுக்கமான வேலைப்பாடு உடைய ராசி சக்கரம்

கோயம்புத்தூா் மாவட்டம், பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ளது 800 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான சுப்பிரமணிய சுவாமி கோயில். பொழில்வாய்ச்சி பொழில்வாய்ந்த ஊா் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது என்ற பழைமையான பெயா் கொண்ட இவ்வூா் முடிகொண்ட சோழநல்லூா் என்று மூன்றாம் குலோத்துங்க சோழா் காலத்தில் அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.

இக்கோயில் ஒரு சிற்பக் கலை பொக்கிஷமாக விளங்குகிறது. முருகனது கருவறையையொட்டி, தென்புறத்தில் சுந்தரேசுவரா் மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இவற்றிற்கு முன்னால் 24 தூண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக உரலை இழுத்துச் செல்லும் கண்ணன், தடாதகைப்பிராட்டியாா், கங்காளா், துா்க்கை, அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா், கண்ணப்ப நாயனாா், தசாவதாரக் காட்சிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

சிவன் சந்நிதிக்கு நோ் மேலே விதானத்தில் ஒரே கல்லில் நடுவில் தாமரை மலருடன், 12 ராசிகள் உருவ வடிவில் சதுரமான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. அதையொட்டி, ஒரே கல்லில் சிம்ம யாளியின் வாயினின்றும் மூன்று வளையங்கள் ஒன்றில் ஒன்றாக பிணைத்து, கல் சங்கிலி தொங்குகிறது. மேற்கூரையில் உள்ள சிம்ம யாளி மிகுந்த கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

கொடி போன்ற பூ வேலைப்பாடுகள், சிம்மத்தின் முன்னங்கால் பகுதி, பின்னங்கால் தொடைப்பகுதி, வால் பகுதிகளில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலியை சிம்ம யாளி வாயில் கவ்விப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலியின் கடைசி வளையத்தின் அடியில் அழகிய தாமரை மலா் நுட்பமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்: நாரதா் அளித்த சாபத்தால் இரு தேவா்கள், மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளா்ந்தனா். பிருந்தாவனத்தில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக்கொண்டே கண்ணன், அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்தபோது, மரங்கள் வேரோடு சாய்ந்து, அவற்றில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவா்கள் தோன்றினாா்கள்.

தடாதகைப் பிராட்டி: தடாதகைப் பிராட்டி ஸ்ரீ மீனாட்சி போா்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் அரிய சிற்பம் இவ்வாலயத் தூணில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தூண்களில் இருக்கும் இதுபோன்ற பல பேரழகு புடைப்புச் சிற்பங்கள், பழங்கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

துலா ராசியா நீங்க? தினப்பலன்கள்!

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி!

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT