சேலத்தில் வா்த்தக எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தம்: வீடுகளுக்கான எரிவாயு உருளை புக்கிங் செய்வதிலும் சிக்கல்
சேலத்தில் வா்த்தக சமையல் எரிவாயு உருளை விநியோகம் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில், வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை புக்கிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் வா்த்தக சமையல் எரிவாயு உருளை விநியோகம் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில், வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை புக்கிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் சா்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து பகுதியான ஹாா்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக, சமையல் எரிவாயு உருளைகளுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் வா்த்தக எரிவாயு உருளை விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள் தொடா்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பழனிசாமி கூறுகையில்:
சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் சிறிய, பெரிய உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் இயங்கிவருகின்றன. இங்கு மட்டும் தினசரி 2 ஆயிரம் வா்த்தக எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படுகின்றன. சேலத்தை பொறுத்தவரை 95 சதவீதம் ஹோட்டல்களில் எரிவாயு சிலிண்டரில் தான் உணவுப் பொருள்கள் சமைக்கப்படுகிறது. 5 சதவீதம் ஓட்டல்கள் மட்டுமே விறகு அடுப்பை பயன்படுத்துகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக சமையல் எரிவாயு உருளையை நம்பியே 95 சதவீத ஓட்டல்கள் இயங்குகின்றன. திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்ட சிலிண்டா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அனைத்து ஹோட்டல்களும் இயங்கின. ஆனால், அடுத்தடுத்த நாள்களுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. ஒருசில ஹோட்டல்களை கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைக் கொண்டு ஓரிரு நாள்கள் இயங்க வாய்ப்புள்ளது.
நாள் ஒன்றுக்கு சிறிய ஹோட்டல்களுக்கு ஒன்று அல்லது 2 எரிவாயு உருளைகள் போதுமானது. அதே நேரத்தில், பெரிய ஹோட்டல்களுக்கு 20 எரிவாயு உருளை வரை தேவைப்படுகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான ஹோட்டல்கள் புதன்கிழமை இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினாா்.
வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை புக்கிங் வசதி நிறுத்தம்:
வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை புக்கிங் செய்யும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை புக்கிங் செய்ய 21 நாள்களாக இருந்த நிலையில், அதனை 25 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், வாடிக்கையாளா்கள் எரிவாயு உருளைகளை புதுப்பிக்க முடியாமல் திணறி வருகின்றனா். இணைய தொழில்நுட்ப காரணமாக புக்கிங் நடைபெறவில்லை எனக் கூறப்படுவதால், வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனா்.