முகப்பு
கிருஷ்ணகிரி

மஞ்சமேடு ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா

மஞ்சமேடு ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

Updated On : 22 மே, 2018 at 4:18 AM
பகிர்:

மஞ்சமேடு ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டி அருகேயுள்ள மஞ்சமேடு கிராமத்தில் ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் ஒருவாரமாக விரதமிருந்து வருகின்றனர். திங்கள்கிழமை காலை கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். மாலையில் அம்மனுக்கு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சிவப்பு மஞ்சள் நிற ஆடை அணிந்து முக்கிய தெருக்கள் வழியாக தலையில் கூழ் குடுவையை சுமந்தபடி பம்பை மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர். இரவில் நாடகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை கரகம் எடுத்தல் நிகழ்ச்சி, திருத்தேர் திருவீதி வருதல், புதன்கிழமை காலை அம்மனுக்கு பலியிடுதல், படையல் செய்து விருந்தினர்களுக்கு உபசரிப்பு, பிற்பகலில் மா விளக்கு எடுத்து ஊர்வலமாக வருதல் நிகழ்ச்சியும், இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை இளம்காளியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை கம்பத்து மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு ஊர்வலம் இரவு ஆடல், பாடல் நடன நிகழ்ச்சியும், சனிக்கிழமை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மாதேஸ்வரன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இந்தத் திருவிழாவில் விழா சிறப்பு அழைப்பாளர்களாக பர்கூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத், பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சின்னசாமி, அரசம்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்தகுமார், பாரூர் வருவாய் ஆய்வாளர் சந்தோஷம், கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மஞ்சமேடு கிராம மக்கள், ஊர் கவுண்டர் துரைசாமி, தங்கமணி, மந்திரி கவுண்டர் ராமமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.