ஐயப்பன் கோயிலின் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி ஊர்வலம்
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐயப்பன் கன்னி பூஜை சங்கம், இந்து அன்னையர் முன்னணி, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், அடுத்து இந்து சமுதாய மக்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அருகே தொடங்கிய ஊர்வலம், சென்னை சாலை, சேலம் சாலை வழியாக ஐயப்பன் கோயில் அருகே நிறைவு பெற்றது. இந்த பேரணியில் ஒருங்கிணைப்பாளர்கள் யுகேஷ்வரன், வெங்கடேஷ், அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 50 வயது வரையில் இந்து தர்ம கலாசாரங்களை மீறி செல்லமாட்டேன் என கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோயில் முன் பெண்கள் உறுதியேற்றனர். இதையடுத்து குருசாமிகள், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 முதல் 50 வயது உள்ள பெண்களுக்கு மாலை அணிவிக்கவும், இருமுடி கட்டவும் மாட்டேன், கோயிலுக்கு அழைத்து செல்லமாட்டேன் என உறுதிமொழி ஏற்றனர். மேலும், ஐயப்பன் கோயிலில் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.