ரூ. 500 ஓய்வூதியத்துக்காக 90 வயது மாமியாரை 4 கி.மீ. தூக்கிச் சுமந்துவந்த பெண்! - விடியோ
ரூ. 500 ஓய்வூதியத்துக்காக 90 வயது மாமியாரை 4 கி.மீ. தூக்கிச் சுமந்துவந்த பழங்குடியினப் பெண்ணைப் பற்றி...
சத்தீஸ்கரில் ரூ. 500 ஓய்வூதியத்துக்காக பெண் ஒருவர் தனது 90 வயது மாமியாரை சுமந்து வந்த நெஞ்சை உருக வைக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள குனியா பகுதியின் ஜங்கல்பாரா கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் சுக்மனியா. இவருடைய மாமியார் சோன்வாரி (90). இவர் முதியோருக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகையான ரூ. 500-ஐப் பெற்று தன் வாழ்க்கையைக் கழித்து வருகிறார்.
இந்த நிலையில், சோன்வாரி பயன்படுத்திவரும் வங்கியின் ‘கே.ஒய்.சி’ விவரங்கள் புதுப்பிக்கப்படாததால், பிப்ரவரி மாதத்திலிருந்து கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியத் தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்காக ஜங்கல்பாராவில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள மைன்பட் நகரில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கிக்குச் செல்வதற்காக கடந்த மே 22 ஆம் தேதி, தனது மாமியார் சோன்வாரியைத் தனது முதுகில் சுமந்து நடந்தே 4 கி.மி. தொலைவு சென்றுள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவத்தை அவ்வழியே சென்ற ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், “இவரை ஏன் தூக்கி சுமந்து செல்கிறீர்கள்..” என்று விடியோ எடுப்பவர் கேட்க, “வங்கி மித்ரா என்ற திட்டத்தில் வங்கி அதிகாரி மாதாந்திர ஓய்வூதியத்தை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பார் என்றும், இருப்பினும், கே.ஒய்.சி. நடைமுறைகள் முடிவடையாததால் மாமியாருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை” என்றும் கூறுகிறார் சுக்மனியா.
இதுகுறித்து வங்கியின் மூத்த அதிகாரி குஷ்பூ கூறுகையில், “சோன்வாரிக்கு ஜனவரி மாத ஓய்வூதியம் அவரது வீட்டிலேயே வழங்கப்பட்டது. நிலுவையில் உள்ள கே.ஒய்.சி. நடைமுறைகள் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை.
அந்தப் பெண் அவருடைய மாமியாரை முதுகில் சுமந்தபடி வங்கிக்கு வந்தார். அவருக்கான கே.ஒய்.சி நடைமுறைகள் முடிந்த பிறகு, நிலுவையிலிருந்த நான்கு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 2,000 வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் ஓய்வூதியம் அவர்களது வீட்டிலேயே கிடைக்கும்” என்றும் அந்த அதிகாரி உறுதியளித்தார்.
டிஜிட்டல் இந்தியா, இணைய வங்கி சேவைகளில் தீவிரம் காட்டும் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு இடங்களில் அரங்கேறுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, ஏப்ரல் மாதத்தின் கடைசியில், ஒடிசாவில் இதுபோன்ற நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியது.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் மல்லிபாஷியில் ஜீது முந்தா (42) என்பவர், மறைந்த சகோதரியான கலா முந்தாவின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக ஒடிசா கிராமிய வங்கிக்குச் சென்றிருந்தார்.
அப்போது, தனது சகோதரி இறந்ததை வங்கியில் ஜீது கூறாத நிலையில், கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணம் தரப்படும் என வங்கி அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூற, அதைத் தொடர்ந்து, மூன்று முறை ஜீதுவுக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இதனால், தங்களின் வீட்டருகே புதைக்கப்பட்டிருந்த கலாவின் உடலைத் தோண்டியெடுத்து, எலும்புக் கூட்டுடன் வங்கியில் பணத்தை எடுக்க ஜீது சென்றுள்ளார். எலும்புக் கூட்டுடன் ஜீது வருவதைக் கண்டு வங்கி அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.