கிருஷ்ணகிரி

மனித நேயம், ஒற்றுமையை வலியுறுத்தி ராஜஸ்தான் இளம்பெண் விழிப்புணர்வு ஓட்டம்

DIN

மனிதநேயம், ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவம் ஆகியன குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்த சூபியா (33), என்ற இளம்பெண் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,035 கி.மீ. தூரம் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சூபியா, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  மக்களிடையே மனித நேயம், ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,035 கி.மீ. தூரம் ஓட்டத்தில் ஈடுபட முடிவு செய்து,  கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, தனது ஓட்டப் பயணத்தை காஷ்மீரில் தொடங்கினார்.
தனது ஓட்டப் பயணத்தை 100 நாள்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ள அவர்,  உத்தரப் பிரதேசம்,  குஜராத்,  மத்தியப் பிரதேசம்,  மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களைக் கடந்து செவ்வாய்க்கிழமை தமிழகத்துக்கு வந்தார்.
இவர்,  கடந்த 2017-இல் ஆக்ரா முதல் தில்லி வரை 720 கி.மீ. தூரத்தை 16 நாள்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.  இதற்காக அவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது இந்த விழிப்புணர்வு ஓட்டப் பயணத்தை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் விடுப்பு வழங்காததால்,  வேலையை ராஜிநாமா செய்து விட்டு தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.  இவருடைய விழிப்புணர்வுப் பயணத்தைப் பாராட்டி, அவர் செல்லும் வழிகளில் சமூக ஆர்வலர்கள் சூபியாவுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சூபியா செய்தியாளர்களிடம் கூறியது:  பொதுமக்களிடையே எதிர்மறையான எண்ணங்கள் அதிகளவில் உள்ளன.  அவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.  எனது நாடு, அன்பை மட்டுமே விரும்பும் நாடு.  நமது நாட்டில் மனித நேயம் இன்றும் உயிருடன் உள்ளது என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முன்னெடுத்துள்ளேன் என்றார்.
பின்னர்,  ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி நோக்கிச் சென்ற அவர், வரும் ஜூலை 21-ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது ஓட்டப் பயணத்தை நிறைவு செய்வதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT