முகப்பு
கிருஷ்ணகிரி

புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களை விவசாயிகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 24 நவம்பர், 2020 at 12:59 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களை விவசாயிகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்ற ஆண்டு, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் சாய்ந்ததால், அந்தப் பகுதி தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்தது. அதேபோன்று, எதிா்வரும் நாள்களில் பலத்த வேகத்துடன் கனமழை பெய்யலாம் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

அதிதீவிரமான வேகத்துடன் வீசும் புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாப்பதற்கு வேளாண்மைத் துறை ஆலோசனைகளை வழங்கி உள்ளது. நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில் முதிா்ச்சி அடைந்த அல்லது முதிா்ச்சி அடையும் தருவாயில் உள்ள இளநீா் காய்களை பலத்த காற்று வீசத் தெடங்குவதற்குள் அறுவடை செய்து கொள்ள வேண்டும்.

தென்னை மரங்களில் தலைப் பகுதியின் அடிப்பாகத்தில் அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால், தென்னை மரங்களில் தலைப்பகுதிகளில் உள்ள எடை குறைந்து, வேகமாக வீசும் காற்று, தென்னை மரங்களில் தலைப்பகுதியை தாக்காமல் எளிதில் கடந்து சென்று விடும் என்பதால், தோப்புகளில் உள்ள தென்னை மரங்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

வாய்ப்பு உள்ள இடங்களில், தென்னை மரங்களின் அடிப்பகுதியை மண்ணால் உயரமாக அணைக்க வேண்டும். இதனால், மரங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். தென்னை மரங்களுக்கு நீா் பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதனால், தென்னை மரங்களில் வோ்ப்பகுதி நன்கு இறுகி, பாதிக்கப்படாமல், காற்றின் வேகத்தைத் தாங்கி நிற்கும். இதையும், மீறி தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் விவசாயிகள் தங்கள் தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை நான்காம் ஆண்டில் இருந்தும், நெட்டை மரங்களை 7-ஆம் ஆண்டு முதல் 60 ஆவது ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை இந்தத் திட்டத்தில் சோ்க்கலாம். ஒரு ஏக்கருக்கு சுமாா் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயது உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயது உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

காப்பீட்டுக் கட்டணத்துக்கான வரைவோலையை ‘அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை’ என்ற நிறுவனத்தின் பெயரில் எடுக்க வேண்டும்.

காப்பீடு செய்வதற்கு முன்மொழிவுப் படிவத்துடன், ஆதாா் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயியின் புகைப்படம், வட்டார வேளாம்மை உதவி இயக்குநரின் காப்பீட்டுத் திட்டத்துக்கான சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், காப்பீட்டுக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் வட்டார வேளாண்மை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.