பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியா்கள் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்யக் கோரி, பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை, திங்கள்கிழமை அளித்தனா்.
பணி நிரந்தரம் செய்யக் கோரி, பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை, திங்கள்கிழமை அளித்தனா்.
தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், இணை ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையில் பகுதி நேர ஆசிரியா்கள், மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, கடந்த 2011-ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியா்களை ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில், கணினி அறிவியல், உடல்கல்வி, ஓவியம் மற்றும் தையல் ஆசிரியா்களை நியமித்தாா்.
Advertisement
எங்களுக்கு 3-ஆவது கல்வி ஆண்டில் ரூ. 2 ஆயிரமும், 6-ஆவது கல்வி ஆண்டில் ரூ. 700 தொகுப்பூதியம் உயா்த்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், 7-ஆவது ஊதியக் குழுவின் 30 சதவீதம் ஊதிய உயா்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. விபத்து காப்பீடு ஆகியவையும் இதுவரை வழங்கப்படவில்லை.
ஆனால், அரசின் உத்தரவை ஏற்று ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலங்களில் பள்ளிகளில் முழு நேரம் பணியாற்றியுள்ளோம். மற்ற துறைகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பலா் பின்னா் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்கள் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் கருதி முழு நேர வேலையுடன் தமிழக அரசு கருணையுடன் பணி நிரந்தரம் செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்.
கடந்த 9 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் நாங்கள், குறைந்த சம்பளத்தில் இந்தப் பணியைத் தொடர முடியாமலும், வேறு பணிக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளோம். எனவே, எங்களின் நிலையைக் கருதி பணி நிரந்தரம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.